ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு…. ஐரோப்பாவைச் சுட்டெரிக்கும் அடுத்த ஆபத்து…. 43 டிகிரி வெயில்… ‘ஹூ’ கொடுத்த மரண பயம் காட்டும் எச்சரிக்கை….!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய கடுமையான வெப்ப அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், அங்கு மற்றொரு புதிய வெப்ப அலை உருவாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உருவாகி வரும் இந்த புதிய வானிலை மாற்றம் காரணமாக, போர்ச்சுகல் மற்றும் தெற்கு ஸ்பெயின் போன்ற பகுதிகளில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். அடுத்த சில வாரங்கள் ஐரோப்பாவுக்கு மிகவும் ஆபத்தான காலமாக இருக்கும் என்றும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக இன்னும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ‘ஹூ’ கவலை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 20 முதல் 28 வரை நீடித்த வெப்ப அலையானது, ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகக் கடுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அதீத வெப்பத்தின் காரணமாக மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. குறிப்பாக பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 3,700 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றமே இந்த அளவுக்கு உலகை சுட்டெரிக்கும் தீவிர வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

   

இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வது குறித்து, ‘ஹூ’ அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்லூஜ் 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆய்வின் போது, வெப்ப அலைகளைச் சமாளிக்க முன்கூட்டியே ‘Heat-Health Action Plan’ எனப்படும் சிறப்பு திட்டங்களை வகுத்திருந்த நாடுகள், மக்களைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் குறைவான நாடுகளிடமே இத்தகைய முன்னெச்சரிக்கை திட்டங்கள் இருப்பது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட ஹான்ஸ் க்லூஜ், பாதிப்பு வந்த பிறகு செயல்படுவதை விடுத்து, வருமுன் காக்கும் சுகாதார கட்டமைப்பை நாடுகள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

   

குறிப்பாக, முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், வீடற்றவர்கள் மற்றும் தனிமையில் வாழும் வயதானவர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இன்னும் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வெப்ப அலையின் போது மிக அதிக ஆபத்தில் இருக்கும் இவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாடுகள் வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆண்டுதோறும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள நீண்டகாலப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.