தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
