தமிழக சட்டசபையில் 2026-27 நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய பட்ஜெட் உரை 11.40 மணி அளவில் நிறைவடைந்ததை அடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர்.
அவையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது கார் எனத் தவறாக நினைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரின் முன்பக்கக் கதவைத் திறந்து ஏற முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவலர், “சார், இது எதிர்க்கட்சித் தலைவரின் கார்” என்று சுட்டிக்காட்டினார். நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சற்றே முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த காரில் ஏறிச் சென்றார். இந்த சுவாரசிய நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடிக்க, அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயல்வது இது முதல் முறையல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதும் இதேபோன்று உதயநிதியின் காரில் ஏற முயன்ற சம்பவம் நிகழ்ந்தது. அரசியல் ரீதியான காரசார விவாதங்களுக்கு நடுவே, இதுபோன்ற எதேச்சையான நிகழ்வுகள் சட்டமன்ற வளாகத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
கடந்த முறை இந்த சம்பவம் நடந்தபோது, அப்போதைய திமுக எம்.எல்.ஏ-வாக இருந்த உதயநிதி ஸ்டாலின் சட்டசபையிலேயே இதனை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். “நீங்கள் வெளிநடப்பு செய்தாலும் எனது காரில்தான் ஏறச் செல்கிறீர்கள்; அடுத்த முறை தாராளமாக என் காரை எடுத்துச் செல்லுங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் சென்றுவிடாதீர்கள்” என்று உதயநிதி கூறியது அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அன்றைய நகைச்சுவை நினைவுகளை புதுப்பிக்கும் வகையில், தற்போதும் அதே போன்றதொரு நிகழ்வு சட்டசபை வளாகத்தில் அரங்கேறியுள்ளது.
