“மனைவியோட வாழத் தெரியாதவர்…. சொந்தக் குடும்பத்தோடு வாழ துப்பில்லை”…. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கிப் பேசிய இபிஎஸ்…. திடீர் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஐந்து முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை நோக்கி சரமாரியான விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

தாராபுரத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அடித்தளத்தையும் தொண்டர்களையும் நம்பியே தவெக இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். “அதிமுகவினரை வைத்துத்தான் கட்சியையே நடத்த முடியும் என்ற அவல நிலைக்குத் தமிழக வெற்றிக் கழகம் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆள்வது எப்போதும் அதிமுகதான்; ஆனால் அதிமுக தொண்டர்களின் கதவுகளைத் தட்டிப் பிச்சை எடுப்பது போல விஜய் வாக்கு சேகரித்து வருகிறார்” என்று சாடிய அவர், சொந்தக் கட்சியின் வலிமையின்றி பிற கட்சிகளை நம்பி அரசியல் செய்வதாக விஜய்யை விமர்சித்தார்.

   

மேலும், விஜய்யின் பிரச்சாரப் பேச்சுக்களைக் கடுமையாகச் சாடிய எடப்பாடி பழனிசாமி, பாசம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த தனது கருத்துக்களைப் பகிரங்கமாகப் பதிவு செய்தார். மேடைகளில் “உங்கள் வீட்டில் அண்ணனாக, தம்பியாக, மாமனாக இருப்பேன்” என்று பேசுவதெல்லாம் பச்சைப் பொய் என்று குறிப்பிட்ட அவர், “உண்மையான பாசம் என்பது தாய் தந்தையுடனும், கட்டிய மனைவியுடனும், பெற்ற பிள்ளைகளுடனும் இணைந்து வாழ்வதுதான். மேடைகளில் வீரவசனம் பேசுவதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும்; நாங்கள் அப்படி வாழ்ந்து காட்டுகிறோம்” என்று நேரடியாகத் தாக்கினார்.

   

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள இந்த காரசாரமான விமர்சனங்கள் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மக்களிடம் வெறும் கவர்ச்சிகரமான பேச்சுகளை மட்டும் பேசி வாக்குகளைப் பெற விஜய் முயல்வதாக அதிமுக தரப்பு குற்றம்சாட்ட, இதற்குத் தவெக தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதிலடி வரப்போகிறது என்பதை நோக்கித் தாராபுரம் இடைத்தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.