அதிமுகவின் உட்கட்சி மோதல் மற்றும் கூட்டணி கணக்குகள் தமிழகத்தில் 2026 தேர்தலை நோக்கி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் கூட சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த எடப்பாடி சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனான சந்திப்புக்கு பிறகு தனது போக்கில் மென்மை காட்டி வருகின்றார். பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாக இபிஎஸ் இறங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் இபிஎஸ் தலைமையிலான கூட்டணியில் இணையவே மாட்டோம் என்று ஓபிஎஸ் மற்றும் தினகரன் தரப்பு பிடிவாதம் காட்டுவது புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.
இவர்கள் இருவரும் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்டிருக்கின்றனர். அதிமுக ஒன்றாக இணையாத பட்சத்தில் தென் மாவட்டங்களில் வாக்குகள் சிதறி அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். அதிலும் குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்காவிட்டால் தென் தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என ரத்தத்தின் ரத்தங்கள் அஞ்சுகின்றனர். இபிஎஸ் தனது தலைமையை தக்க வைப்பாரா அல்லது தென் மண்டல சவால்களை சமாளிக்க விட்டு கொடுப்பாரா என்பதுதான் 2026 தேர்தலில் பரபரப்பான விவாதமாக உள்ளது.
