தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக இபிஎஸ் மூலமாக விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் இபிஎஸ் சூசகமாக கூறியது தமிழக அரசியலில் பேசு பொருளானது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயுடன் தான் பேசவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக கூட்டத்திற்கு தமிழக வெற்றி கழகம் கட்சியினர் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர். விஜயின் கட்சித் தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் அறிவித்த பிறகும் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
