அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணைப்பின் மூலம் அதிமுகவில் தனக்கும், தனது தீவிர ஆதரவாளர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என்பதை அவர் பிரதானக் கோரிக்கையாக வைத்துள்ளார். இருப்பினும், இக்கோரிக்கையை ஏற்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
தினகரனையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சிக்குள் மீண்டும் சேர்த்துக் கொண்டால், கட்சிக்குள் மீண்டும் ஒரு ‘பவர் சென்டர்’ உருவாகிப் பிளவு ஏற்படுமோ என்று இபிஎஸ் நினைப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கட்சியை இணைப்பதற்குப் பதிலாக, எதிர்வரும் தேர்தல்களில் அமமுகவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்க மட்டுமே எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரியவருகிறது.
