“தெம்பு, திராணி இருக்கிறதா முதல்வரே?”…. தவெக MLA விவகாரத்தில் இபிஎஸ் போட்ட அதிரடி சவால்…. தமிழக அரசியலில் வெடித்த புதிய புயல்…!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடர்பு கொண்டு, போலீசில் புகார் அளிக்கக் கூடாது என மிரட்டியதாகவும், அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாகக் கூறி சமரசம் பேச முயன்றதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளன. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

   

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசு மற்றும் தவெக தலைமை மீது மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், “இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக எம்.எல்.ஏ சரவணனின் ஆதரவோடு இந்த கொடூரம் அரங்கேறியுள்ளதாகத் தோன்றுவதாகவும், ஒரு மக்கள் பிரதிநிதியே இத்தகைய கேடுகெட்ட செயலை மறைக்க சமரசம் பேசுவதை முதலமைச்சர் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, சொந்த ஆட்சியில், சொந்தக் கட்சியினரால் நடந்துள்ள இந்த அநீதிக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தவெக தலைமைக்கு இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். “அமைச்சருக்குத் தெரியும், மேலிடத்திற்குத் தெரியும்” என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெனாவட்டாகப் பேசுவதைக் குறிப்பிட்ட அவர், “அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா அல்லது அவரைத் தாண்டிய அதிகார மையமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேடைகளில் பேசும் அடுக்குமொழி வசனங்களை எல்லாம் முதலமைச்சர் முதலில் தன் கட்சியினரைப் பார்த்துப் பேச வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

 

இறுதியாக, பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி, அதனை மறைக்க முயன்ற தவெக எம்.எல்.ஏ-வை பதவியை ராஜினாமா செய்ய வைத்து, கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாகத் தகவல்கள் வருவதால், இந்த வழக்கை அரசியல் இடையூறுகளின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மற்றும் அதற்குத் துணை போன எம்.எல்.ஏ, அமைச்சர் என யாராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.