ஒரு தொழிலாளி பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பி.எஃப் பங்களிப்பு செய்திருந்தாலும், எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற சிறப்பான திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பொதுவாக, ஓய்வூதியம் பெறுவதற்குப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், பணியின் போது ஊழியர் மரணமடையும் பட்சத்தில் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதன் மூலம், ஒரே ஒரு நாள் பி.எஃப் செலுத்தியிருந்தாலும், அந்த ஊழியரின் மனைவி அல்லது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் வரை குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள வாழ்க்கைத் துணைக்கு வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவதோடு, 25 வயது வரை குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
மேலும் ஒருவேளை குழந்தைகளுக்குப் பிறகு மற்றுமொரு வாரிசு இருந்தால், அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இத்தகைய நெகிழ்வான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வருங்கால வைப்பு நிதியில் சேரும் ஒவ்வொரு ஊழியரும் தனது நியமனதாரர் விவரங்களைச் சரியாகப் பதிவேற்றுவதன் மூலம், இக்கட்டான காலங்களில் அவர்களது குடும்பத்தினர் இந்தச் சலுகைகளை எவ்விதத் தடையுமின்றி விரைவாகப் பெற முடியும்.
