குடிமகன்களுக்கு குட் நியூஸ்… தடை விதிக்கப்பட்ட மறுநாளே கிரீன் சிக்னல்… ஒரே நாளில் ‘யு-டர்ன்’ அடித்த டாஸ்மாக்…. 11 பிரபல மதுபானங்களின் தடை திடீரென ரத்து….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

தமிழகத்தில் மதுபானங்களை விநியோகம் செய்யும் அரசு நிறுவனமான டாஸ்மாக் நிர்வாகம், ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதித்த தடையை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளை மீறி, தயாரிப்பு பெயரிடலில் குளறுபடிகள் செய்ததாகவும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகளை சேர்த்ததாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தத் தடை உத்தரவு வெளியான ஒரே நாளுக்குள், FSSAI அனுப்பிய மற்றொரு கடிதத்தைக் மேற்கோள் காட்டி டாஸ்மாக் நிர்வாகம் தடையை நீக்கியுள்ளது. ‘என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம்’, ‘மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி’, ‘ஹனி பீ ஃபைன் பிராந்தி’ உட்படப் பிரபல 11 மதுபான வகைகளின் விற்பனை மீண்டும் தடையின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. FSSAI தரப்பில் அளிக்கப்பட்ட அடுத்தகட்ட விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மக்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு சார்ந்த தீவிரமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விதிக்கப்பட்ட ஒரு தடை, வெறும் 24 மணி நேரத்திற்குள் சட்டென வாபஸ் பெறப்பட்டது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. போதிய ஆய்வுகள் மற்றும் முறையான சோதனைகள் இன்றி அவசர அவசரமாகத் தடை விதிக்கப்பட்டதா அல்லது நிர்வாக ரீதியான அழுத்தங்கள் காரணமாகத் தடை நீக்கப்பட்டதா என்ற கோணத்தில் இந்த விவகாரம் தற்போது பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.