“இனி அவருடன் தான் வாழ்வேன்!”… கணவருடன் சேர்ந்ததால் ஆத்திரம்… தீ வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலன்… துடிதுடிக்க நடந்த பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 20, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி குருவலட்சுமி. இவருக்கும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த அதே ஊரைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முறையற்ற உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்ததால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையினால் குருவலட்சுமி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இருப்பினும், தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் மீண்டும் கணவர் சுந்தர்ராஜுடன் இணைந்து வாழத் தொடங்கினார். இதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், குருவலட்சுமியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 10-ஆம் தேதி காலை குருவலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற சின்ன கெங்குராஜ் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்த மண்ணெண்ணெயை குருவலட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். பலத்த தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவலட்சுமி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக கெங்குராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்திருந்த பசுவந்தனை காவல்துறையினர், பெண்ணின் இறப்பிற்குப் பிறகு தற்போது இதனை கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.