திரை உலகில் கவர்ச்சியான வாழ்க்கைக்கு பின்னால் ஏராளமான சோகங்கள் நிறைந்து கிடக்கின்றன. சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வெகுவிரைவில் முடிந்து தீரா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி திரையில் முன்னணி நாயகிகளாக ஜொலித்த நடிகைகள் எதிர்பாராத மரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி:
இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என்று பழமொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். ரஜினி மற்றும் கமல் தொடங்கி பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த இவர் 54 வயதில் உயிரிழந்தார். துபாயில் உள்ள ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இது மாரடைப்பு என்று கருதப்பட்டாலும் அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.

திவ்யபாரதி:
பிரபல நடிகையான திவ்ய பாரதி தன்னுடைய 19 வயதில் உயிரிழந்தார். கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தன்னுடைய ஐந்தாவது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தார். தற்செயலாக இவர் கீழே விழுந்ததால் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. இவருடைய மரணம் அந்த சமயத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவருடைய மரணத்திற்கு பின்னால் இன்னும் பல சந்தேகங்கள் மறைந்து கிடக்கின்றன.

சில்க் ஸ்மிதா:
தென்னிந்திய சினிமாவில் முத்திரை பதித்த சில்க் ஸ்மிதா தனது வாழ்க்கையை சோகமாகத்தான் முடித்துக் கொண்டார். 1979 ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. மலையாள மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 35 வயதில் இவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியாமல் நிறைய மர்மங்கள் நிறைந்துள்ளது.

ஜியா கான்:
பாலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கு என்று தனி ஒரு அங்கீகாரம் பெற்ற நடிகை தான் ஜியா கான். கடந்த 2007 ஆம் ஆண்டு நிஷாப்த்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அமீர்கானின் கஜினி மற்றும் அக்ஷய் குமாரின் ஹவுஸ்புல் உள்ளிட்ட வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்த இவர் 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக பல செய்திகள் வெளிவந்தது.

பர்வீன் பாபி:
பாலிவுட் நடிகையான இவருடைய வாழ்க்கையும் சோகத்தில் தான் முடிந்தது. இவர் தனது கடைசி நாட்களை தனியாகவும் அமைதியாகவும் கழித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். 1976 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற வரலாற்று சாதனை படைத்தவர். இவருடைய மரணத்தில் பல மர்மங்கள் இன்றும் நிறைந்துள்ளது.

மதுபாலா:
இந்திய திரை உலகில் முகல் இ ஆசம் போன்ற பல கிளாசிக் படங்களில் நடித்த மதுபாலா இந்தியாவின் மர்லின் மன்றோ என்று அழைக்கப்பட்டவர். இவருக்கு இருவது வயதில் வென்ட்ரிக்குலர் செப்டல் குறைபாடு என்ற இதய நோய் ஏற்பட்டது. அந்த நாட்களில் அதற்கு சரியான சிகிச்சையும் கிடையாது. படப்பிடிப்பு தளங்களில் கூட நிறைய முறை வலியை அனுபவித்துள்ளார். இவர் 1969 ஆம் ஆண்டு தன்னுடைய 36 வயதில் உயிரிழந்தார்.
