ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஐயப்பன் என்பவர், தனது பணிக்காலம் முடிந்து நாளை (மார்ச் 31) ஓய்வுபெற இருந்தார். இந்நிலையில், அவரது பணி ஓய்வு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் இறுதி கட்டமாகச் சரிபார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அவர் பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு கல்விச் சான்றிதழ் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிராமணக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளி, அது தொடங்கப்பட்ட 1968 முதல் இன்று வரை தொடக்கப்பள்ளியாக (5-ஆம் வகுப்பு வரை) மட்டுமே இருந்து வரும் நிலையில், அவர் அங்கிருந்து எட்டாம் வகுப்பு சான்றிதழ் பெற்றது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விரிவான விசாரணையில், ஐயப்பன் தாக்கல் செய்தது முற்றிலும் போலியான சான்றிதழ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலரின் பரிந்துரையின் பேரில், கீழக்கரை நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நாளை பணி நிறைவு பெற்று ஓய்வூதியப் பலன்களைப் பெறவிருந்த நிலையில், ஐயப்பனை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முப்பதாண்டு காலப் பணிக்குப் பிறகு, ஓய்வுபெறும் கடைசி நாளில் மோசடி அம்பலமாகி வேலை பறிபோன சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
