பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மதியம் பெட்டியாவில் உள்ள சுப்ரியா சினிமா சாலையில் அமைந்துள்ள ‘சென்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ்’ நகைக்கடைக்குள் வாடிக்கையாளர்களைப் போல நுழைந்த அந்த ஆயுதமேந்திய கும்பல், திடீரெனத் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளது.
அப்போது கொள்ளையைத் தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் ஒருவரை, கொள்ளையர்கள் துப்பாக்கியின் பின்பகுதியால் கொடூரமாகத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்; தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கடையிலிருந்த தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணத்தை அள்ளிக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை குறித்துத் தகவல் அறிந்ததும், டிஐஜி ஹர் கிஷோர் ராய் மற்றும் எஸ்எஸ்பி குமார் கௌதம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தனர்.
நகைக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், கொள்ளையர்களை அடையாளம் கண்டு பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் துல்லியமான மதிப்பு குறித்துக் கணக்கெடுத்து வருகின்றனர்.
