ஒரு கார்ப்போரேட் ஊழியர் தனது மனைவிக்கு முதல் பிரசவம் என்பதால், இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு மேலாளருக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அந்த மேலாளர் விடுப்பு வழங்க மறுத்து, “இப்போது லீவு கொடுக்க முடியாது, பிறகு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். அத்துடன், மாற்று வழியாக “மருத்துவமனையில் இருந்தே வேலை பார்க்க முடியுமா?” என்றும், “மனைவியின் பிரசவத்துக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றும் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஊழியர் தனது மனைவிக்கு உதவியாக இருக்க விடுப்பு தேவை என்று மீண்டும் வலியுறுத்திய பிறகே, மேலாளர் மனமில்லாமல் விடுப்பு அளித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் உரையாடலை அந்த ஊழியர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த நிலையில், இது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பிரசவக் காலத்தில் கூட ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க மறுக்கும் இந்திய மேலாளர்களின் அணுகுமுறை குறித்து பலரும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
