“ரூ.100 லட்சம் கோடி சொத்து… ஆனா இருக்கிறது 400 சதுர அடி வாடகை வீடா…?” – உலகையே வாயடைக்க வைத்த எலான் மஸ்க்கின் ரகசியம்…!!

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, அதன் பங்கு மதிப்பு வர்த்தகத் துவக்கத்திலேயே 21%-க்கும் மேல் உயர்ந்தது. இதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள மஸ்க்கின் சொத்து மதிப்பும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாஸ்டாக் பங்குச் சந்தையில் 7,500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஆரம்பத்தில் ஒரு பங்கின் விலை 135 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதலீட்டாளர்களின் பெரும் வரவேற்பால் அதன் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக, அமெரிக்கப் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலேயே ஆறாவது மிகப்பெரிய நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் உருவெடுத்து, உலகத் தொழில்நுட்ப சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

   

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த போதிலும், எலான் மஸ்க் வியப்பூட்டும் வகையில் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார். டெக்சாஸ் மாநிலத்தின் போகா சிகா பகுதியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ‘ஸ்டார்பேஸ்’ ஏவுதளத்திற்கு அருகில், ‘பாக்ஸபிள்’ நிறுவனம் வடிவமைத்த வெறும் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வாடகை வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார். ஒரு படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை மட்டுமே கொண்ட இந்த வீட்டை அவர் “மிகவும் அற்புதமான இடம்” என்று பாராட்டியுள்ளார். ஆஸ்டின் நகரில் பல பெரிய சொத்துக்கள் இருந்தும், இந்த எளிய வாழ்க்கையை மஸ்க் தேர்ந்தெடுத்திருப்பது உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.