மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணக்கடத்தல் புகாரால் மயிலாப்பூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ₹11.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் விளைவாக, வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. தற்போது மயிலாப்பூரிலும் அதே போன்ற சூழல் நிலவுவதால், தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
