கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (54) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளியைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணையைத் தொடங்கினர்.போலீஸாரின் முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனால் நகைக்காகவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியபோது, மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடைந்த வளையல் துண்டுகளே வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளரான விஜயலட்சுமி (42) என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அந்தப் பதிவுகளைக் கூர்ந்து கவனித்தபோது, வீட்டிற்குள் செல்லும்போது அவரது கைகளில் இருந்த கண்ணாடி வளையல்கள், வெளியில் வரும்போது இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் இட்லி கடை உரிமையாளரைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.போலீஸாரின் கெடுபிடி விசாரணையில் இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து, அவரிடமிருந்த தங்கச் செயினைக் திருட முயன்றபோது அவர் கூச்சலிட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த கொலையாளி, மூதாட்டியின் வாயைப் பலமாகப் பொத்தியதால் மூச்சுத் திணறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்தப் போராட்டத்தின்போதே கொலையாளியின் கை வளையல்கள் உடைந்து விழுந்தது விசாரணையில் அம்பலமானது. தற்போது குற்றவாளியைக் கைது செய்த குனியமுத்தூர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
