உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இஷாக் அலி என்பவரை, கடந்த 2012-ஆம் ஆண்டே வருவாய்த் துறை ஆவணங்களில் இறந்தவராக அதிகாரிகள் தவறுதலாகப் பதிவு செய்துள்ளனர். அவர் பணியில் இருந்தபோதே இவ்வாறு செய்யப்பட்டதால், தனது சட்டப்பூர்வ அடையாளத்தை இழந்து தவித்து வந்துள்ளார். அதிகாரிகளின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளைத்துணி போர்த்தி, மாலை அணிந்து பிணம் போல படுத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
திடீரென பிணம் போல இருந்தவர் எழுந்து, “ஆட்சியர் அவர்களே, நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்” என்ற வாசகம் அடங்கிய அட்டையைக் காண்பித்து அங்கிருந்தவர்களை அதிரவைத்தார். வருவாய்த் துறை ஆய்வாளர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை ஆவணங்களில் சாகடித்ததாகவும், அதன் மூலம் தனது பூர்வீக நிலத்தை வேறொரு பெண்ணின் பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளதாகவும் இஷாக் அலி குற்றம் சாட்டியுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக நீதியைத் தேடிப் போராடியும் பலன் கிடைக்காததால், இந்த அதிரடி முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். அதிகாரிகளின் மெத்தனப் போக்கை அம்பலப்படுத்திய இந்த வினோதப் போராட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
