கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில், குடிபோதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது மனைவியின் தாத்தா மற்றும் பாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான சதீஷ் என்பவர், மதுப்பழக்கத்தினால் தனது மனைவி மேகலாவைத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் அவரைப் பிரிந்து மேகலா தனது தாத்தா ராமசாமி வீட்டில் தஞ்சமடைந்த நிலையில், மனைவியை தன்னுடன் அனுப்பக் கோரி சதீஷ் அங்கு சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது ராமசாமி, “தினமும் குடித்துவிட்டு வந்தால் உன் மனைவி எப்படி உன்னுடன் குடும்பம் நடத்துவார்?” என்று நியாயமாகக் கேள்வி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ், அங்கிருந்த அம்மிக்கல்லைத் தூக்கி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாள் ஆகிய இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த சதீஷைத் தர்மபுரியில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
