ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. “திங்கட்கிழமை கையெழுத்து.. சனிக்கிழமை பாங்காக்?”… கடைசி நேரத்தில் சொதப்பிய திட்டம்.. பெங்களூரில் அஸ்வத்தாமன் அதிரடி கைது…!

By Nanthini on சித்திரை 30, 2026

Spread the love

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்கு தப்ப முயன்றபோது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகனான அஸ்வத்தாமன் சில நாட்களுக்கு முன்புதான் நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்தார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக் செல்ல முயன்ற அஸ்வத்தாமனை, குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Circular) நடைமுறையில் இருந்ததால், உடனடியாக பெங்களூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை எம்கேபி நகர் போலீசார் விரைந்து சென்று அவரைத் தங்களதுCustody-க்குள் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அடுத்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் எதற்காக வெளிநாட்டிற்கு தப்ப முயன்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

   

இந்தக் கொலை வழக்கில் மொத்தம் 29 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் ஏற்கனவே என்கவுண்டரில் கொல்லப்பட்டார். தற்போது நாகேந்திரன் மறைவைத் தொடர்ந்து, அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இன்னமும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாகவே இருந்து வரும் சூழலில், அஸ்வத்தாமனின் இந்தத் திடீர் தப்பிக்கும் முயற்சிக்குப் பின்னால் இருக்கும் பின்னணி குறித்தும், அவருக்கு யாரெல்லாம் உதவினார்கள் என்பது குறித்தும் சென்னை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.