தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய திட்டங்களுக்கே பெயர்களை மாற்றி அறிவித்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 85 நாட்கள் கடந்த பின்னரும் புதிய முயற்சிகள் ஏதுமின்றி வெறும் வசனங்கள் பேசுவதிலும் காட்சி ஊடகங்கள் மூலமுமே காலத்தைக் கழித்து வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தலின் போது மக்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாகத் தேர்தல் நேரத்தில் பிரசாரமாக முன்வைக்கப்பட்ட மகளிருக்கான ₹2,500 நிதி உதவி, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளைகள், முதியோர் உதவித்தொகை உயர்வு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற எந்தவொரு முக்கிய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது மக்களை ஏமாற்றும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், மாநிலத்தில் ₹55,000 கோடிக்கும் அதிகமான வருவாய்ப் பற்றாக்குறையும் ₹1 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையும் நிலவும் சூழலில், குறுகிய காலத்தில் கூடுதல் கடன் வாங்கியுள்ள இந்த அரசு அதை எவ்விதம் சீர்செய்யப் போகிறது என்பதற்கான எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
