தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தவெக கூட்டணிக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மாலை எடுக்கப்போகும் முடிவு, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் உட்பட 5 எம்எல்ஏக்கள் பங்கேற்காதது சலசலப்பை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் தலைமையில் 36 அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரகசிய ஆலோசனையில், விஜய்யின் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து சாதகமான குரல்கள் ஒலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் 118 என்ற மேஜிக் எண்ணை எட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றாலும், ‘பார்டர்’ பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்குத் தடையின்றி ஆட்சி நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மக்கள் நலன் சார்ந்த சட்டங்களைக் கொண்டுவர அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான சட்டங்களோ அல்லது கொள்கை முரண்பாடுகளோ ஏற்படும் பட்சத்தில், ஆதரவை வாபஸ் பெறப்போவதாகக் கூட்டணிக் கட்சிகள் எச்சரிக்கக் கூடும் என்பதால் விஜய்யின் அரசியல் பயணம் கத்தி மீது நடக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, திருமாவளவனின் நிலைப்பாடு மற்றும் அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களின் முடிவு ஆகிய இரண்டும் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை உறுதி செய்யப்போகிறது. விஜய்க்குத் தேவையான அந்த இரண்டு இடங்கள் விசிக மூலம் கிடைக்குமா அல்லது அதிமுகவின் ஒரு பகுதியினர் ஆதரவுக்கரம் நீட்டுவார்களா என்பது இன்று மாலைக்குள் தெளிவாகிவிடும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
