அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழகக் காவிரிப் படுகைகளின் வளம் மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை தவெக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இத்திட்டத்திற்காக மத்திய அரசு தனது 60 சதவீத நிதிப் பங்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தும், முந்தைய திமுக அரசு எவ்வித நிதியையும் ஒதுக்காமல் அதனை முற்றிலும் கிடப்பில் போட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மேடைகளில் மாற்றத்தைப் பற்றிப் பேசும் தவெக அரசு புதிய திட்டங்கள் எதையும் தீட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், முடங்கிக் கிடக்கும் இத்திட்டத்தைத் தொடங்கினாலே போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சவடால்களையோ, சமூக ஊடகப் பதிவுகளையோ மற்றும் ஆட்சித் தக்கவைப்பு வேலைகளையோ விடுத்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த உன்னதத் திட்டத்திற்குத் தவெக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
