அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் பதிலடி கொடுத்துள்ளார். பல கோடி மதிப்பிலான ஆலைகள் தமக்கு இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த அவர், அந்த ஆலைகள் அனைத்தும் தனது நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானவை என்றும், அவற்றுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். சம்பந்தியின் ஃபேக்டரி 1997-லேயே தொடங்கப்பட்டது என்றும், மகனின் சகலைக்குச் சொந்தமான ஆலை 1996 முதல் இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், குடும்ப உறவுகளுக்குள் சண்டையை மூட்டிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

செங்கோட்டையனின் சொத்துக்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, “30 ஏக்கரில் கதிர் கல்லூரி எப்படி வந்தது?” என்று நேரடித் தாக்குதலை முன்வைத்தார். செங்கோட்டையன் தனது வயதுக்கு ஏற்றார் போல கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும், கூட்டத்தில் விசிலடிப்பவர்களின் கைதட்டலுக்காக எதை வேண்டுமானாலும் பேசுவது முறையல்ல என்றும் அவர் சாடினார். செங்கோட்டையனிடம் அளவுக்கு அதிகமான பணம் மிஞ்சியிருப்பதாகவும், ஆனால் அவர் யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

   

மேலும், செங்கோட்டையன் யாரையும் வளர விடாத குணம் கொண்டவர் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத் தேர்தல் தோல்விகளையும் சுட்டிக்காட்டினார். ஈரோடு மாவட்டத்தில் அதிக காலம் அமைச்சராக இருந்த செங்கோட்டையன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளை வெற்றி பெற்று கொடுத்தார்? என்று வினவினார். இவ்வாறு செங்கோட்டையனின் அரசியல் செயல்பாடுகளையும், அவர் மீதான சொத்து புகார்களையும் பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.