தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து நடிகர் சத்யராஜ் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கைகளைப் பேசுவதாகக் கூறி அரசியலுக்கு வந்த விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கள் ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த சத்யராஜ், ஒரு முதலமைச்சரை “ஸ்டாலின் அங்கிள்” என்று ஒருமையில் விளித்துப் பேசியது முறையற்றது என்று கடுமையாகச் சாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான விஜய்யின் விமர்சனத்தை முன்வைத்துத் தாக்கிய சத்யராஜ், கடந்த கால நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பேசினார். “தலைவா” திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கலுக்காக, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க கொடநாடு சென்று கெஞ்சியதை நினைவுகூர்ந்த அவர், அன்று காட்டிய மரியாதையை இன்று முதலமைச்சரிடம் ஏன் காட்டவில்லை எனக் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவிடம் இதுபோன்று பேசியிருந்தால் “கொத்து பரோட்டா” போட்டிருப்பார்கள் என்றும், திமுக அரசின் பெருந்தன்மையை விஜய் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் சத்யராஜ் மக்களிடையே ஒரு முக்கியக் கேள்வியை முன்வைத்தார். “சிறிய அளவில் சம்பளம் வாங்கும் என்னையே மக்கள் எளிதில் சந்தித்து குறைகளைக் கூற முடியாது; அப்படியிருக்கையில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு பெரிய நடிகரைத் தொகுதியில் மக்கள் எங்கே போய் சந்திப்பீர்கள்?” என அவர் கேட்டார். ஒரு சாதாரணக் குடிமகனாகத் தன்னை முன்னிறுத்தி, நட்சத்திர அந்தஸ்து கொண்ட வேட்பாளர்கள் மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதைச் சூசகமாகத் தெரிவித்தார்.
திமுகவின் தீவிர ஆதரவாளராகவும், சமூக நீதி மற்றும் திராவிடக் கொள்கைகளில் பற்றுடையவராகவும் அறியப்படும் சத்யராஜ், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு நாட்கள் தொடர் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளார். இன்று ராயபுரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்த அவர், நாளை மாதவரம், ஆவடி போன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரிக்க உள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவரது பேச்சுக்கும் சத்யராஜ் அளித்துள்ள இந்தப் பதிலடி தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
