“மிட்டாய் கொடுத்து MLA-க்களை தூக்கிய தவெக”…. கொந்தளித்த எடப்பாடி… பின்னணியில் குதிரை பேரம்?…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தவெக அரசு சொந்தக் காலில் நிற்காமல் இரவல் காலில் நிற்பதாகவும், ரீல்ஸ் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்துச் செல்வது போல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஆசை காட்டித் தங்கள பக்கம் தவெக அரசு இழுத்துள்ளதாகவும், குதிரை பேரம் மூலம் விலை பேசி அவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாகவும் தனது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் த.வெ.க அரசு நிறைவேற்றவில்லை என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனில் அக்கறையின்றி ஆட்சி நடப்பதாகக் கூறினார். மாநிலம் முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகியுள்ளது என்றும், நெல் கொள்முதல் முறையாக நடைபெறாததால் விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று கூறப்பட்டாலும், அது தொடர்பான பத்திரிகைச் செய்திகள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்தார்.

   

அதிமுக ஆட்சிக் கால சாதனைகளை நினைவு கூர்ந்த அவர், 32 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான தொலைநோக்கு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை விவரித்தார். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களைச் சட்டபூர்வமாகப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்தது அதிமுக அரசு தான் என்றும், குடிமராமத்துத் திட்டம் மற்றும் ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே என்பதை அழுத்தமாகக் கூறினார்.

   

தற்போதைய ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், அதிமுக ஆட்சியில் கிடைத்த நன்மைகள் எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை என்பதே மக்களின் தற்போதைய எண்ணமாக உள்ளது என்றும் தெரிவித்தார். மக்களுக்காக உழைக்காமல், எந்தவித மக்கள் பணியையும் செய்யாமல் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி த.வெ.க தான் என்றும், மக்களுக்கான கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்காத பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.