“குத்திக் கிழிக்கப்பட்ட குடல்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த தம்பதி”… ஈசிஆரில் அரங்கேறிய கொடூரம்… திடுக்கிடும் பின்னணி….!

By Nanthini on மாசி 18, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கணவன்-மனைவி இருவரும் அண்டை வீட்டுக்காரரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜமுனா, எதிர் வீட்டில் வசித்து வந்த சுசில் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் பார்த்திபனுக்குத் தெரியவரவே, குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக ஜமுனா கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனது குடும்பம் சிதைந்ததற்குக் காரணம் சுசில் தான் என்ற ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன், அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த பார்த்திபன், தனது இருசக்கர வாகனத்தைச் சுசிலின் வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இதனைச் சுசிலின் மனைவி கிரிஜா தட்டிக்கேட்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய சுசிலும் இதில் தலையிடவே, பிரச்சனை முற்றி கைகலப்பாக மாறியது.

   

ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற பார்த்திபன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசிலின் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தினார். இதனைத் தடுக்க முயன்ற மனைவி கிரிஜாவையும் பார்த்திபன் இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தம்பதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் கானத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குப்போராடிய சுசிலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார், உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற பார்த்திபனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.