கேரளாவை சேர்ந்த 23 வயதுடைய ஜாக்கப் ரெனிவர்கீஸ் கடந்த நான்கு வருடங்களாக செங்கல்பட்டு கானத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான அமீர்கடல் சார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய சொந்த மாநிலமான கேரள மாநிலத்தில் வசித்து வந்தார். இவர் சில பாடங்களில் தோல்வியுற்றதால் மீண்டும் தேர்வு எழுத சென்னை ஈசிஆர் வந்துள்ளார். இன்று அரியர் தேர்வு எழுத இருந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய ஜூனியர் மாணவர் ஜஸ்வந்த் உடன் இ சி ஆர் சாலை கனத்தூர் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு பல்சர் பைக்கில் சென்றுள்ளார். டீ குடித்துவிட்டு மீண்டும் தங்கும் விடுதிக்கு பைக்கில் சென்ற அவர் மாமல்லபுரம் நோக்கி செல்லும் பிரதான சாலையில் செல்லாமல் எதிர் திசையில் ஆபத்தான முறையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கிக் கொண்டு சென்றார்.
அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் வாகனத்தை ஜாக்கப் சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஜூனியர் மாணவர் சிறுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாக்கப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
