அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத சில விசித்திரமான நபர்களைச் சந்தித்துப் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தில், பிரிட்டன் ராணுவ உடைகளைப் போன்ற சிவப்பு நிற சீருடை அணிந்த, அசாதாரண உயரமும், பிளாட்டினம்-பொன்னிற முடியும் கொண்ட மூன்று நபர்களுடன் டிரம்ப் பேசிக் கொண்டிருக்கிறார். “அதிபர் டிரம்ப் அடையாளம் தெரியாத நபர்களைச் சந்திக்கும் கசிந்த புகைப்படம்” என்ற தலைப்புடன் இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பது குறித்து இணையவாசிகள் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகப் பயனர் ஒருவர், இவர்கள் நார்வே நாட்டின் மன்னர் காவலர்கள் என்றும், கடந்த 2018-ஆம் ஆண்டு நார்வே நாட்டு அரச குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம் இது என்றும் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மறுபுறம், இந்த படத்தின் உண்மைத்தன்மை குறித்து எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ செயற்கை நுண்ணறிவு கருவியிடம் கேட்டபோது, இது முற்றிலும் போலியானது என்று தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி என்றும், டிரம்ப் இத்தகைய பதிவை வெளியிடவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. நாடகத்தனமான சிவப்பு நிற உடைகள் மற்றும் நீளமான வெள்ளை முடியுடன் இருக்கும் இந்த நபர்கள் எந்தவொரு உண்மையான நிகழ்வுடனோ அல்லது வெள்ளை மாளிகை ஆவணங்களுடனோ ஒத்துப்போகவில்லை என்பதால், இது வெறும் கவன ஈர்ப்புக்காகப் பரப்பப்படும் ஒரு போலிப் படம் என்பது தெளிவாகியுள்ளது.
