இதை மட்டும் யாரவது நிரூபித்தால்… நெருப்பில் குதித்து உயிரை விடத் தயார்.. சவால் விடுத்த துரைமுருகன்..!!

By Soundarya on சித்திரை 17, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளித்தான்பட்டறை பகுதியில் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், வாள் வீச்சு மற்றும் மேளதாளங்கள், பொம்மை நடனங்களுடன் தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

தேர்தல் பிரச்சார வாகனத்தில் இருந்து மக்களிடையே உரையாற்றிய துரைமுருகன், தனது நீண்டகால அரசியல் பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கும் தான், இதுவரையில் யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை என உறுதிபடத் தெரிவித்தார். தன் மீது சுமத்தப்படும் ஊழல் புகார்களை மறுத்த அவர், தான் லஞ்சம் வாங்கியதை யாராவது நிரூபித்தால் அங்கேயே நெருப்பில் குதித்து உயிரை விடத் தயார் என சவால் விடுத்தார்.

   

மேலும், ஒழுக்கம் மற்றும் நேர்மை குறித்துப் பேசிய அவர், ஒரு பெண்ணிடம் தான் தவறாக நடந்து கொண்டதாக யாராவது கூறினாலே தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் தயங்கமாட்டேன் என்றார். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஒழுக்கமும் நேர்மையும்தான் மிக முக்கியம் என்றும், மக்கள் அளிக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.