எடுத்தவுடனே குத்தம் சொல்லாதீங்க… 6 மாசமாவது டைம் கொடுங்க… சிஎம் விஜய்-க்கு ஆதரவாக துரை வைகோ ஆவேசம்..! பின்னணி என்ன…?

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிச்சேரி கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். எந்தவொரு புதிய அரசாங்கமும் முழுமையாகச் செயல்படவும், அதன் நிர்வாகத் திறனை நிரூபிக்கவும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலமாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்களுக்குப் புதிய அரசு நிர்வாகத்தில் முந்தைய அனுபவம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தற்போதுதான் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதால், புதிய திட்டங்களும் மாற்றங்களும் தரைமட்டத்திற்குச் சென்று பலன் தரச் சற்றே கால அவகாசம் தேவைப்படும் என்றும், இது உடனடியாக நடப்பதற்கு மந்திரவாதம் அல்ல என்றும் எதார்த்த நிலைப்பாட்டை விளக்கினார்.

   

அரசின் மீதான தற்போதைய விமர்சனங்கள் குறித்துப் பதிலளித்த துரை வைகோ, ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவது முறையல்ல என்றார். அதே வேளையில், தவெக அரசுக்கு இந்த அவகாசத்தை வழங்கிய பின்னரும் இதே நிலை நீடித்தால், மதிமுக நிச்சயம் மக்கள் பக்கமிருந்து அரசை வன்மையாகக் கண்டிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.