“காங்கிரஸ் ஒரு செத்துப் போன கட்சி… எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது”…. துரைமுருகன் கொடுத்த மரண சாட்டையடி….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி மற்றும் தற்போதைய ஆளும்கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு காரசாரமானக் கருத்துகளைத் தெரிவித்தார். “காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது, அது செத்துப்போன கட்சி. அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஜென்மத்திலும் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்கள்” என்று சாடிய அவர், புதிய அரசியல் வருகைகள் குறித்துப் பேசுகையில் எல்லாராலும் எம்.ஜி.ஆர் அல்லது விஜய் போல ஆகிவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

   

மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “பருவமழை தொடர்பாக எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் கட்டுக்கடங்காத மழை வரும்போது எதையும் செய்ய முடியாது, ஆனால் அதைச் சமாளிக்கும் திறமையான நிர்வாகம் இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் எதுவுமே வெளிப்படைத்தன்மையோடு இல்லை. மழை பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து முதல்வர் வண்டியில் சென்று ஆய்வு செய்வதும், மரங்களை வெட்டுவதும் நிரந்தரத் தீர்வாகாது” என்று விமர்சித்தார்.

   

மேலும், மாநிலத்தில் நிலவும் மின்சாரக் கொள்முதல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “நமக்குப் போதிய மின்சார உற்பத்தி வசதி இருந்தும் ஏன் வெளியிலிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது என்பதை அரசு வெளிப்படையாகச் சொல்வதில்லை. அதேபோல், ஆளும்கட்சியினரே அதிகளவில் போதைப்பொருள்களை வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. ஆளும் தரப்பிற்கு பயம் போய்விட்டதால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. சென்னையில் தற்போது வெள்ளநீர் வடிகிறது என்றால் அது முந்தைய திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளால்தானே தவிர, தற்போதைய அரசு ஒரு மண்வெட்டி மண்ணைக் கூடத் தோண்டவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

 

இறுதியாக, எஸ்.ஐ.ஆர் விவகாரம் மற்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நுழைய திமுக தான் காரணம் எனத் தவெக மற்றும் காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது. ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஐ.ஆரை எதிர்த்துப் போராடியது நாங்கள்தான். காங்கிரஸ் கட்சி என்பது நமத்துப் போன ஒரு சமாச்சாரம்; இப்போது ஏதோ வெளிநடப்பு நாடகம் நடத்துகிறார்கள். மக்களுக்காக எதையும் செய்யாத இந்த மர்மமான அரசை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.