கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர் அலி அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடன் இணைந்து ஷாஃபிக் மற்றும் மன்சூர் அலி ஆகியோரும் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கொச்சியின் முக்கிய பகுதிகளில் இயங்கும் இரவுநேர கடைகள் மற்றும் மசாஜ் சென்டர்களின் பின்னணியில் இவர்கள் தங்கள் நெட்வொர்க்கை நடத்தி வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட செயலி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, வாட்ஸ்அப் வழியாக பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளனர். காப்பற்றுவதாகவோ அல்லது அன்பு செலுத்துவதாகவோ கூறி பெண்களை வலையில் வீழ்த்தி, போதைப்பொருள் கொடுத்து மயக்கி, கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் தள்ளியுள்ளனர். இதில் வட இந்திய பெண்களும், கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2025 ஜூலை மாதத்தில் எர்ணாகுளம் தெற்கு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், இந்த கும்பலிடமிருந்து சிறுமிகள் உட்பட 6 இளம் பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த கும்பல் மூலம் பல லட்ச ரூபாய் வரை முறைகேடாக ஈட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
