தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில், ஆந்திராவைச் சேர்ந்த டிடிபி (TDP) எம்பி புட்டா மகேஷ் குமார் மற்றும் தெலுங்கானாவின் முன்னாள் பிஆர்எஸ் (BRS) எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 14 சனிக்கிழமை நள்ளிரவில், எலைட் ஆக்ஷன் குரூப் ஃபார் டிரக் லா என்போர்ஸ்மென்ட் (EAGLE) குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தச் சோதனையின்போது பண்ணை வீட்டிலிருந்து சுமார் 2 கிராம் கோகைன் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் எம்பி மகேஷ் குமாருக்கு ‘நெகட்டிவ்’ என்று வந்தாலும், பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விரிவான ரத்தப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் பிடிபட்ட நிலையில், ரோஹித் ரெட்டி, மகேஷ் குமார் உட்பட 6 பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த சட்டவிரோத விருந்தில் சிக்கியுள்ளது தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
