மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய எண்ணெய் மையமான புஜைரா துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து பல ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதோடு, எண்ணெய் ஏற்றி, இறக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
புஜைரா துறைமுகம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. ஹோர்மூஸ் நீரிணைக்கு வெளியே அமைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் இப்பாதையைத் தவிர்த்து நேரடியாக ஏற்றுமதி செய்ய இதைப் பயன்படுத்துகின்றன. உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ‘பங்கரிங்’ மையமான இதன் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், புஜைரா நகரின் அவசர சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் இழப்புகள் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே இப்பகுதியில் நிலவும் போர் பதற்றம், அண்டை நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எனப் பரவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் இத்தகைய அசாதாரண சூழல், வரும் காலங்களில் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
