கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் வரஹாசந்திரா அருகே மதியம் 12:30 மணியளவில் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூர சாலை விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. ஹோலேநரசிபுரா பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்திற்கு முன்னால் ஆபத்தான முறையில் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓட்டுநர், திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் டிராக்டரின் பின்புறம் பலமாக மோதினார்.
இதில் டிராக்டரில் நீட்டிக் கொண்டிருந்த கூர்மையான இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ஓட்டுநரின் மீது பாய்ந்தன. இந்த கோர விபத்தில் ஹோலேநரசிபுரா பணிமனை ஓட்டுநர் சேகர் எம்.டி என்பவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் ஆபத்தான முறையில் கம்பிகளை நீட்டிக்கொண்டு செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கொந்தளித்து வரும் நிலையில், போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
