ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர், லாரி ஓட்டுநர் ஒருவரை ரத்தம் சொட்டச் சொட்டக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீலாநகர் மாருதி சந்திப்பு பகுதியில் போக்குவரத்துத் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஆய்வாளர் பார்வதி, லாரியைத் துரத்திச் சென்று வழிமறித்துள்ளார்.
பின்னர், ஆய்வாளர் பார்வதியின் கண்முன்னே அவரது ஓட்டுநர் வீராங்கா என்பவர், லாரி ஓட்டுநரைச் சரமாரியாகக் கைமுட்டியால் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. “லாரி ஓட்டுநர் மீது தவறு இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அல்லது வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்; அதைவிட்டுவிட்டுச் சட்டம் தன் கையில் எடுத்துத் தாக்குவதற்கு அதிகாரிகளுக்கு யார் உரிமை கொடுத்தது?” என ஆந்திர மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
