“அம்மா… நீ ஏன் யார்கிட்டயும் கைகட்டி நிக்கணும்?”… தாயின் தன்மானத்திற்காக உயிரை விட்ட மாணவி… தலைமையாசிரியர் மீது அதிரடி வழக்குப்பதிவு…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிப்பட்டி அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேர்ந்து சில நாட்களே ஆன 16 வயது மாணவி பள்ளிக்குச் செல்லாததால், அவரை மாற்றுச்சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு தலைமையாசிரியை விமலாதேவி பெற்றோரை அழைத்துள்ளார். அப்போது, மாணவியின் தாய் தலைமையாசிரியையிடம் கைகட்டி நின்றதைக் கண்ட மாணவி, அவ்வாறு நிற்க வேண்டாம் எனத் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை, மாணவியைக் கடுமையாகத் திட்டியதுடன் அவரை ஒருமையிலும் பேசியுள்ளார். நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான அந்த சிறுமி, வீட்டிற்குச் சென்று மறுநாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தங்கள் மகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதிய பாகுபாட்டுடன் தலைமையாசிரியை இழிவுபடுத்தியதே தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது தாய் பிறர் முன் கைகட்டி நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையாலும், ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளாலுமே அவர் இந்த முடிவை எடுத்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், உசிலம்பட்டி காவல்துறையினர் தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.