தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்தியாகத் தன்னை முன்வைத்து களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஒரே நேரத்தில் இருவேறு அமலாக்கத்துறை விவகாரங்கள் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. ஊழலற்ற நேர்மையான அரசியல் என்ற பிம்பத்துடன் செயல்பட்டு வரும் விஜயின் அரசியல் பயணத்திற்கு, இந்த இருமுனைச் சவால்களும் தவெக தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்திய சூழலில், இதனை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதே தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
முதல் நெருக்கடியாக, ரூ.5,000 கோடி நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத் தலைவரும், தனியார் தொலைக்காட்சி இயக்குநருமான பிரேம்குமார் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. மக்கள் பணத்தைச் சுருட்டி சட்டவிரோதப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அரசியல் நிகழ்வுகளுக்கு பிரேம்குமாரின் நிறுவனப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இதனை ஆயுதமாக ஏந்தியுள்ள ஆளுங்கட்சியான திமுக, மக்கள் பணத்தில் தவெக அரசியல் செய்கிறதா என்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விஜய் தரப்பிற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது சவாலாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து, புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, கட்சியில் சேர்ந்த புதிய முக்கிய நிர்வாகியின் பின்னணி குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசியல் களத்தில் மாற்று சக்தியாக நிலைநிறுத்த முயற்சிக்கும் வேளையில், இந்த இரு நிகழ்வுகளும் விஜயின் ‘தூய சக்தி’ பிம்பத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. பிற கட்சிகளிலிருந்து வரும் நிர்வாகிகளின் பின்னணி பற்றிய விமர்சனங்கள் ஒருபுறமும், அமலாக்கத்துறையின் பிடி இறுகுவதால் அடுத்து யாரெல்லாம் விசாரணை வளையத்திற்குள் வருவார்களோ என்ற பதற்றம் தவெக தொண்டர்கள் மத்தியில் நிலவுவதும் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இருமுனைத் தாக்குதலின் நடுவே தள்ளப்பட்டுள்ள விஜய், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்குத் தகுந்த அரசியல் விளக்கங்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பிரேம்குமார் விவகாரத்திலும், சி. விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கையிலும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவெக தலைமை எடுக்கப்போகும் தெளிவான முடிவுகளே, விஜயின் எதிர்கால அரசியல் நகர்வையும் அவரது இயக்கத்தின் நம்பகத்தன்மையையும் தீர்மானிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
