மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கப் படைகள் முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்தி வருவதாகவும், ஈரானின் ராணுவ அசைவுகள் அனைத்தும் 24 மணி நேரமும் அமெரிக்க உளவுப் பிரிவால் மிக தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஈரான் முழு கண்காணிப்பில் உள்ளது; அவர்கள் எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களைக் கவனித்து வருகிறோம்” எனக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானியப் படைகள் அப்பகுதியில் மீண்டும் ரடார்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை உருவாக்க முயன்றதாகவும், அமெரிக்கப் படைகள் அதனை உடனடியாகக் கண்டறிந்து அழித்ததாகவும் அவர் கூறினார். ஈரானால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், சர்வதேசக் கடல் வழித்தடத்தின் பாதுகாப்பை அமெரிக்கா தொடர்ந்து உறுதி செய்யும் என உறுதியளித்தார்.
