நாளை பொங்கல் பண்டிகை. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது இனிப்பான தித்திக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு. ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கலிடும்போது கரும்பை வைத்தால் தான் அது முழுமையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஊரில் இருக்கும் இளவட்டங்கள் அனைவரும் கையில் ஒரு கரும்புத்துண்டை எடுத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டே உலா வருவது பார்ப்பதற்கே அருமையாக இருக்கும்.

இப்படி பொங்கல் என்றாலே கரும்பு தான் என்று பொங்கலுக்கு கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது அதை ஏன் அந்த நேரத்தில் நாம் சாப்பிட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இனி காண்போம்.
பொங்கல் பண்டிகை நம் தமிழ்நாட்டில் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. வருடம் பிறந்து முதல் பண்டிகையாக பொங்கல் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கும் மற்ற தொழில்களுக்கும் உதவி செய்யும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. புதிதாய் அறுவடை செய்யப்பட்ட நெல், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் வைத்து சூரிய உதயத்தின் முன்பு வீட்டு வாசலில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த பொங்கல் பண்டிகையின் போது விசேஷமாக இருக்கும் கரும்பு என்பது ஓர் ஆண்டு காலம் வளரக்கூடியது ஆகும். இதன்மூலம் கரும்பு உழைப்பை கற்று தரும் வகையில் உதாரணம் காட்டப்படுகிறது. அதாவது முதலில் கரும்பு பொறுமையாக வளர்ந்து இறுதியில் மக்களுக்கு தித்திப்பை வழங்குகிறது. அதன்படி இளமையில் கஷ்டப்பட்டு மக்கள் உழைக்க வேண்டும் அப்படி உழைத்தால் முதுமையில் இனிமையான வாழ்வு கிடைக்கும் என்பதை இந்த கரும்பு உணர்த்துவதாக கூறப்படுகிறது. அதுதான் பொங்கல் பண்டிகையில் கரும்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
