ஒவ்வொரு மனிதனின் திறமையான செயல்பாட்டுக்கு புத்தி கூர்மை மிகவும் அவசியமானது. கூர்மையான மூளை கொண்டவர்கள் தான் அதிகம் சாதிக்கிறார்கள். மூளையை சுறுசுறுப்பாக வைக்க பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். புதிர்களை தீர்ப்பது புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது போன்றவற்றை செய்வதன் மூலம் மூளை கூர்மையாகும் என்று கூறுவார்கள். ஆனால் ஒரே இடத்தில் இருக்காமல் நம் உடலை அசைத்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நம் மூளை கூர்மையுடன் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யும்போது இதயம் வேகமாக துடித்து அதிக ரத்தத்தை வெளியேற்றும். இது மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. இது உங்களை சுறுசுறுப்பாக உணர வைப்பதோடு நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது. 59 முதல் 83 வயது உடைய 76 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் விறுவிறுப்பான நடை பயிற்சி அல்லது நடனம் போன்ற சுறுசுறுப்பான உடல் செயல்பாடுகளை செய்த போது அவர்களது நினைவாற்றல் சோதனையில் சிறப்பாக மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். எனவே உடற்பயிற்சி மூலம் மூளை ஊக்கம் பெறுகிறது கூர்மையாக இருக்கிறது சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது தெரிகிறது. உடற்பயிற்சி செய்வது உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அது சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இது மட்டுமல்லாமல் நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வது யோகா மூலமாகவும் மூளை நன்றாக செயல்படும். ஆனால் உடல் செயல்பாடு டோபோமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற மூளை ரசாயனங்களை வெளியிட தூண்டுகிறது. உடற்பயிற்சி நாம் செய்யும்போது நமக்கு ஒரு நல்ல ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கிறது. இதனால் நம் மூளை Relax ஆகி கூடுதல் அறிவாற்றலை நமக்கு அளிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. தினமும் ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யும் போது மூளை கூர்மையாகும் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உண்மை ஆகும்.