“திமுக-வின் ‘துரந்தர்’ பிரேமலதா!”… இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் மீம்ஸ்… கோபத்தில் உடன்பிறப்புகள்… குஷியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

By Muthu Mani on சித்திரை 18, 2026

Spread the love

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு, யாரும் எதிர்பாராத விதமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது திமுக கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கே ஒரு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ ஆக அமைந்த நிலையில், தற்போது பிரேமலதாவின் அதிரடிப் பேச்சுக்கள் திமுக தலைமையையே தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் மேடையிலேயே அமர்ந்திருக்க, பிரேமலதா பேசிய பேச்சு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “என் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை மற்றும் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது” என அவர் நேரடியாக முன்வைத்த விமர்சனம், மேடையில் இருந்த திமுகவினரை முகம் சுளிக்க வைத்தது. கூட்டணியில் இருந்துகொண்டே ஆட்சியை இவ்வாறு விமர்சிப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

   

அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் திமுகவின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்தை பிரேமலதா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் நகர்வை திமுக முறியடித்த நிலையில், தற்போது பிரேமலதாவோ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் முருகன் அருளால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும்” எனப் பேசியுள்ளார். இது முழுக்க முழுக்க திமுகவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடாகக் கருதப்படுவதால், இணையவாசிகள் அவரை ‘வட சென்னை’ திரைப்பட ஆண்ட்ரியா கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

   

பிரேமலதாவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை எதிர்க்கட்சியான அதிமுக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இது குறித்துப் பேசிய அதிமுக மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி, பிரேமலதாவை ஒரு ‘வீரப் பெண்மணி’ என்று புகழ்ந்ததோடு, அவர் திமுக கூட்டணியில் இருந்தாலும் மறைமுகமாக அதிமுகவிற்காகவே தேர்தல் வேலை செய்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியில் இருந்துகொண்டே எதிரணிக்குப் பலம் சேர்க்கும் வகையில் பிரேமலதா பேசி வருவது அரசியல் களத்தில் ஒரு ‘சஸ்பென்ஸ்’ நாடகமாகத் தொடர்கிறது.