2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக 200 தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தலை எதிர்கொள்ள களமிறங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக திமுக தலைமை உத்தேச பட்டியலை தயாரித்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு தோல்வி அடைந்த தொகுதிகளில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட உள்ளதாம்.
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பே கே என் நேரு மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதனை நோக்கி முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கும் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த முறை வெற்றி பெறுவதற்கும் ஸ்டாலின் தெளிவான உத்திரவாதத்தை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதேபோல அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் அதிருப்தியில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை திமுகவில் இணைக்க வேண்டும் என்ற பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதன் விளைவாக சமீப நாட்களில் மைத்ரேயன், அன்வர் ராஜா, மருது அழகராஜ், முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தயாரித்து வரும் முதல் கட்ட உத்தேச பட்டியலின் படி சுமார் 120 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கடந்தமுறை போலவே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக கட்சிக்கு தலா ஏழு தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தவிர மற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்தால் ஒரு தொகுதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களில் திமுக கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைகளை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது
