உதயநிதி அப்செட்… மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு…. அறிவாலயத்தில் வெடித்த திடீர் மோதல்…?

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் உட்கட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, நிர்வாகச் சீரமைப்பிற்காக மாவட்ட அமைப்புகளின் எண்ணிக்கை 77-லிருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட செயலாளருக்கு அதிகபட்சமாக 2 முதல் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் வகையில் புதிய வரம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சி நிர்வாகத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்க தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிராந்தியங்களில் முன்னாள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் எ.வ. வேலு போன்ற மூத்த தலைவர்களின் நிர்வாகப் பொறுப்புகள் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளாகச் சுருக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்டகாலமாகத் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டக் கழகங்கள் பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரப் பகிர்வு நடவடிக்கை சில மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடையே மனக்குமுறலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 33 மாவட்டங்களுக்கு இளைஞரணியைச் சேர்ந்த திறமையான நிர்வாகிகளை நேரடியாக நியமிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜனநாயக முறைப்படி 16-வது கழக அமைப்புத் தேர்தல் வாயிலாகவே மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்போது, வயது வரம்பு மற்றும் பதவிக் கால வரம்புகள் காரணமாக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

   

திமுகவின் வரலாற்றில் 15 முறை உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள 16-வது உட்கட்சித் தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த நிர்வாகிகளின் செல்வாக்கு மற்றும் இளைஞரணியின் எழுச்சிக்கு இடையே, புதிய மாவட்ட செயலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி வெளிப்படையாக நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எதுஎவ்வாறாயினும், வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சிக் கட்டமைப்பை முற்றிலும் புதுப்பித்து புதிய வேகத்துடன் செயலாற்ற திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது.