தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் தலைகீழாக மாற்றி, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளன. பல ஆண்டுகளாக வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்த திமுகவின் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ ஒரே தேர்தல் தோல்வியால் முற்றிலும் சிதறுண்டு போயுள்ளது. தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்தச் சூழலில், இதுவரை திமுகவோடு கைகோர்த்து நின்ற முன்னாள் கூட்டணிக் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வந்த வேகத்திலேயே தங்களின் சுயரூபத்தைக் காட்டி புதிய அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்தை சாக்காக முன்வைத்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வெறும் ஆதரவோடு நிற்காமல், கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பதவிகளையும் தட்டிப் பறித்துள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே, திமுகவுக்கு எந்த ஒரு முன்தகவலும் தராமல் காங்கிரஸ் முதலில் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து இடதுசாரிகளும், விசிகவும், இறுதியாக நீண்டகால தோழமை கட்சியான முஸ்லிம் லீக்கும் திமுகவை நடுக்கடலில் தவிக்கவிட்டு விடைபெற்றன. இதில் சிபிஎம், சிபிஐ தவிர்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் தற்போதைய புதிய அமைச்சரவையில் சொகுசாக அமர்ந்திருப்பது திமுகவின் உள்வட்டாரத்தை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.
இந்த அரசியல் அந்தரடி மாற்றங்களுக்கு மத்தியில், திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்ட மதிமுகவின் வேதனை தனி ரகமாக வெளிப்பட்டுள்ளது. திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது எங்களுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம். தனித்து நின்றிருந்தால் இன்று நாங்களும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுத்து மாற்று முடிவு எடுத்திருக்கலாம், ஆனால் இந்தச் சின்னம் எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது” என்று பகிரங்கமாகப் புலம்பியுள்ளார். இது திமுக மீதான மறைமுகக் குற்றச்சாட்டாகப் பார்க்கப்படும் வேளையில், வரும் ஜூன் 27 அன்று நடைபெறவிருக்கும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
திமுகவின் இந்த ஒட்டுமொத்த பரிதாப நிலையை அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ‘பாகுபலி’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். “பாகுபலியில் கட்டப்பா முதுகில் ஒரே ஒரு முறைதான் கத்தியால் குத்தினான், ஆனால் இங்கு தேர்தல் வரை எங்களுடன் இருந்துவிட்டு, தோல்வி என்றவுடன் சொல்லாமல் ஓடி புதிய அமைச்சரவையில் அமர்ந்துள்ள பல கட்டப்பாக்கள் மாறி மாறி திமுகவின் முதுகில் கத்தியை இறக்கியுள்ளனர். இந்தத் துரோகம் பாகுபலிக்கு நடந்ததை விடக் கொடியது” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரே ஒரு தோல்வியில் ஒட்டுமொத்த கூட்டணியும் ஆளுங்கட்சிப் பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டதும், “திமுக சின்னத்தில் நின்றது சாபக்கேடு” என்று கூட்டணிக் கட்சியே புலம்புவதும் திராவிட அரசியலில் ஒரு கசப்பான அத்தியாயமாகும். தற்போது எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ள திமுக, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள தனது அடுத்தகட்ட உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…