சோகம்..! திமுகவின் மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on தை 4, 2026

Spread the love
திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல். கணேசன் (92), வயது மூப்பு காரணமாகத் தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று  காலமானார். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், தமிழக அரசியலில் மிக முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தார். 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஆற்றிய பங்களிப்பிற்காகப் பேரறிஞர் அண்ணாவால் ‘மொழிப்போர் தளபதி’ என்று போற்றப்பட்டவர்.
நெருக்கடி நிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்ற இவர், மதிமுக தொடங்கப்பட்ட போது வைகோவுடன் இணைந்து அக்கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்து அக்கட்சியின் உயர்மட்டத் திட்டக்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். இவரது மறைவுச் செய்தி கேட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.