தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய ஏற்கனவே அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவின் அறிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேர் கொண்ட ‘கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை’ அமைத்திருப்பது திமுக நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்று ஒரு தரப்பினர் விமர்சித்தாலும், கள ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்வதற்கான முதற்கட்ட நகர்வுதான் இந்தச் சீரமைப்புக் குழு என்று அறிவாலய உடன்பிறப்புகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் கனிமொழி ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய ஆலோசனைக் கூட்டமே இந்தச் சீரமைப்புக் குழுவின் பிறப்பிற்குப் பின்னணியாக அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பில், தவெக அரசு குறித்தும், திமுகவின் தேர்தல் தோல்வி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்சியின் சில நிர்வாகிகள் துரோகம் செய்ததும், கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்காமல் தவெகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் விவாதிக்கப்பட்டபோது, தவறு செய்த சீனியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்தால்தான் தொண்டர்களுக்குத் தலைமை மீது நம்பிக்கை வரும் என்று சபரீசன் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய ‘GenZ’ தலைமுறைக்கு ஏற்ப சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்குப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று உதயநிதி ஐடியா கொடுக்க, அதற்கு கனிமொழி மாற்றுப் பார்வையை முன்வைத்துள்ளார். சீனியர்களின் அதிகாரத்தை முழுமையாகப் பறித்தால் அவர்கள் மாற்று அரசியலை நோக்கி நகரக்கூடும் என்றும், எனவே சீனியர்களைப் புறக்கணிக்காமல் அதேசமயம் இளைஞர்களையும் பயன்படுத்தும் வகையில் சீரமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் கனிமொழி கூறிய கருத்தை ஸ்டாலின் உள்ளிட்ட மூவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவிலேயே, கட்சியின் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்த மறுசீரமைப்புக் குழு அறிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், மற்றும் தமிழரசி ரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, பரந்தாமன், முரசொலி, டாக்டர் எழிலன், எஸ்.கே.பி. கருணா ஆகிய 10 பேர் கொண்ட இந்த மறுசீரமைப்புக் குழு, மாவட்டச் செயலாளர்களின் எல்லைகளைப் பிரிப்பது, கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் பணிக் குழுக்களைச் சீரமைப்பது, தேர்தல் பணிகளுக்கான நிரந்தர அமைப்பை உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், திமுகவில் நிச்சயம் பல அதிரடி மாற்றங்களையும், ஆக்ஷன்களையும் தலைமை எடுக்கும் என்று திமுக உள்வட்டாரங்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றன.
