தவெக ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், அதன் நகர்வுகளுக்கு எதிராக திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன் தொடர்ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளில், முதலமைச்சர் விஜய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரை இலக்கு வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். குறிப்பாக, மிசா சட்டம் குறித்த அமைச்சரின் பேச்சுக்கும், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டதற்கும் தனது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ-வான பரந்தாமன் திமுகவுக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் விமர்சித்தார். “கட்சி நெருக்கடியில் இருக்கும்போது மட்டுமே அவரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்; தனது அரசியல் வாழ்க்கைக்காகவே அவர் இவ்வாறு பேசி வருகிறார்” என்று பரந்தாமனின் கட்சி நிலை குறித்துச் சுட்டிக்காட்டி நிர்மல் குமார் கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், அமைச்சர் நிர்மல் குமார் இந்த விமர்சனங்களை முன்வைத்த சில மணி நேரங்களிலேயே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் தொகுதியின் திமுக வேட்பாளராக பரந்தாமனை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எழும்பூர் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பரந்தாமனை திமுக தலைமை கார்னர் செய்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் பரந்தாமன், தவெக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள் மூலம் ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் விமர்சனம் வெளியான அதே நாளில் பரந்தாமனுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
